வேலூர்: வேலூர் ஆக்சீலியம் பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி ஜெருஷா ஜாஸ்மின்.
இவர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28, 29-ம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அவரை, மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் நேரில் வரவழைத்து பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
பள்ளி மாணவி ஜெருஷா ஜாஸ்மின், மாவட்ட அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 64-66 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற ஜெருஷா ஜாஸ்மின் கூறும்போது, ‘‘ஆர்வம் காரணமாக குத்துச்சண்டை பயிற்சியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஈடுபட்டேன்.
பங்கேற்ற முதல் மாநில போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இனி அடுத்த கட்ட போட்டிக்கு கடுமையாக உழைப்பேன்’’ என்றார்.