சென்னை: குரூப் 3 பணியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்வில் 54,486 பேர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குரூப் 3 பதவிகளில் வரும் கூட்டுறவு சங்கத்தின் இளநிலை ஆய்வாளர் 14, தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் ஸ்டோர் கீப்பர் 1 என மொத்தம் 15 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
இந்த தேர்வை எழுதுவதற்கு 98,807 பேர் விண்ணப்பித்தனர். இதில் 44,321(44.8%) பேர் மட்டுமேஎழுதினர். தேர்வில் 54,486 பேர் பங்கேற்வில்லை. இதன்மூலம் ஒரு பணியிடத்துக்கு 2,954 பேர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், அரசுத் துறைகளில் உள்ள உதவி புள்ளியியல் ஆய்வாளர், கணினி ஆபரேட்டர், புள்ளியியல் தொகுப்பாளர் பணியில் இருக்கும் 217 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (ஜன. 29) நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வை 35,286 பேர் எழுதவுள்ளனர். இதற்காக 126 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.