மதுரை: குடியரசு தினத்தையொட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் ஜெ. குமார் தேசிய கொடியேற்றினார்.
பின்னர் விழாவில் பேசியவர், "29 மாநிலங்கள், 1618 மொழிகள், 6400க்கும் மேற்பட்ட இனங்கள், 6 மதங்கள், 6 மக்கள் இனக்குழுக்கள், 29 திருவிழாக்கள் அனைத்தும் இணைந்த ஒரே நாடு என்ற பெருமைக்குரியது இந்தியா. இப்பல்கலையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம். நடப்பு கல்வியாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பலகலைகழகத்துடன் இணைந்து புதிய இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
மாணவர்கள் கல்வித்திறன் மேம்பட்டு, சமுதாயத்திற்கு பங்களிக்கும் வகையில் இப்பாடத்திட்டம் உருவாக்கப்படும். பிப்., 3-ம் தேதி முதல் 6 ம்தேதி வரை பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது. இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூர், ஸ்வீடன் போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இதன்மூலம் மாணவர்கள் பயன் பெறுவர். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் ஜன., 30 முதல் பிப்., 3ம் தேதிவரை 400 ஆசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். தானியங்கள் சேமிப்பு, தரம் மேம்பாட்டுக்கென அக்ரோ புட் இன்டஸ்ட்ரி உடன் புரிந்துணர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
விழாவில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.