கடலூர்: சிதம்பரம் அரசுப் பள்ளி மாணவி வயலின் இசையில் அகில இந்திய அளவில் 2-வது இடம் பெற்றுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.20 ஆயிரம்ரொக்கப் பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திவ்ய பூங்கொடி என்ற மாணவி 10-ம்வகுப்பு படித்து வருகிறார். சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த இவர் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இசைக் கச்சேரியில் புல்லாங்குழல் இசை கலைஞராக உள்ளார்.
இந்நிலையில் மாணவி வயலின் மற்றும் செவ்வியல் இசையின் மீது ஏற்பட்ட தாக்கத்தால் வயலின், செவ்வியல் இசையை கற்று வந்தார். பள்ளியில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் குறுவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தை பெற்றதால் இவர் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தை பெற்றார்.
இதைத்தொடர்ந்து அகில இந்திய அளவில் கலா உத்சவ் போட்டி ஒரிஸா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாநிலத்திலிருந்து பங்கு பெற்ற மாணவ, மாணவிகளிடம் போட்டி போட்டு வயலின் மற்றும் செவ்வியல் இசையில் அகில இந்திய அளவில் 2-வது இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.
இது குறித்து பள்ளியின் இசை ஆசிரியை மீனாட்சி கூறுகையில், “இந்த மாணவி மிகவும் ஏழ்மை நிலையில் வயலின், செவ்வியல் இசையை நல்ல முறையில் பயின்று வருகிறார். மாணவியின் ஆர்வத்தை பார்த்து அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்து வருகிறோம்” என்றார்.