கல்வி

‘பள்ளிக்கு திரும்புவோம்' விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்; குழந்தைகளை நல்வழிப்படுத்துவது சமுதாயத்தின் கடமை: தூத்துக்குடி எஸ்.பி. கருத்து

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து ‘பள்ளிக்கு திரும்புவோம்' என்றபெற்றோர் - மாணவர் விழிப்புணர்வுநிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

பள்ளிக்கு திரும்புவோம் என்ற இந்த விழிப்புணர்வு திட்டம் சமுதாய மாற்றத்துக்கான ஒரு விதையாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும்17 வயதுடைய இளஞ் சிறார்கள்பலர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுதங்களது வருங்காலத்தை தொலைத்துவருகின்றனர். அவர்களை நல்வழிபடுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவர்களது கல்வி முழுமை பெறுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

நல்வழிப்படுத்த வேண்டும்

பள்ளிகளில் கல்வியோடு ஒழுக்கம்,உடற்பயிற்சி ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் தவறு செய்வது குறையும். 16, 17 வயதுஎன்பது முழுமையாக பக்குவமடைந்த வயதல்ல. இந்த வயதில் இளஞ்சிறார்கள் குற்றங்கள், தவறுகள் செய்வதைதடுத்து நல்வழிப்படுத்தும் பொறுப்பு சமுதாயத்துக்கு உள்ளது.

தூத்துக்குடி நகர துணை கோட்ட பகுதியில் காவல்துறையின் மூலம் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்திய 205 மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு, கல்வியை இடை நிறுத்திய60 மாணவர்கள் மற்றும் அவர்களதுபெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும், மாணவர்களை நல்வழிப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

பொருளாதாரத்தை தடையாக நினைக்காமல், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும், கல்வியையும் கற்றுக் கொடுத்து, அவர்கள் தவறுசெய்தால் அது தவறு என்று சுட்டிகாட்டி அவர்களை நல் வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமையாகும்.

சாதிக்க இலக்கு வேண்டும்

குழந்தைகள் தவறு செய்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டால் அவர்கள் எந்தவொரு அரசு வேலைக்கோ, வெளிநாட்டு வேலைக்கோ செல்ல முடியாது. தனியார் வேலைக்கு கூட செல்வதற்குதடை ஏற்படும். விளையாட்டுகளில்இலக்கோடு விளையாடினால் தான்வெற்றி பெற முடியும். அதுபோல் வாழ்க்கையில் நமக்கென்று ஒரு இலக்கைஅமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால் தான் சாதிக்க முடியும்.

கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளபழக்குங்கள். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் சட்டப்படி தீர்வு காணுங்கள். முடியும் என்ற எண்ணமே வாழ்க்கையில் சாதித்துக் காட்ட உதவும். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2,405 இடங்களில் மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சுமார் 71,000 பொதுமக்கள் குற்றமில்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதற்கு உறுதிமொழி ஏற்றுள்ளனர் என்றார்.

தொடர்ந்து பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் எஸ்பி கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பிக்கள் சத்தியராஜ், சிவசுப்பு, பொன்னரசு, மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி, பள்ளி செல்லா குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், பள்ளி தாளாளர் ஸ்டேன்லி வேதமாணிக்கம், தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர் மற்றும் காவல் ஆய்வாளர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT