கல்வி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26% தேர்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 35 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 2,257 மாணவர்கள், 2,922 மாணவிகள் என மொத்தம் 5,179 பேர்தேர்வு எழுதினர். இதில் 2,028 மாணவர்கள் (89.85%), 2,750 (94.11%) மாணவிகள் என மொத்தம் 4,778 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 88.12 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 92.26 ஆக உயர்ந்துள்ளது. பாட வாரியான தேர்ச்சி சதவீதத்தில் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 8, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 10, கணக்குப் பதிவியல் பாடப்பிரிவில் 8, பொருளாதாரம், வணிகக் கணிதம், அடிப்படை இயந்திரப் பொறியியல் பாடப்பிரிவுகளில் தலா 2, உணவு சேவை மேலாண்மைப் பாடப்பிரிவில் 90, நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பு பாடப்பிரிவில் 4, தணிக்கையியல் பாடப்பிரிவில் 47 என மொத்தம் 173 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 43 பேர் 551-க்கு மேல் 600 வரையும், 241 பேர் 501-ல் இருந்து 550 வரையும், 543 பேர் 451-ல் இருந்து 500 வரையும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

புல்லா அவென்யூ மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பெரம்பூர், எம்.எச். சாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600-க்கு 586 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், பெரம்பூர் மார்க்கெட் தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும், புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600-க்கு 579, 578 மதிப்பெண்கள் பெற்று 4 மற்றும் 5-ம் இடத்தையும் பெற்றுள்ளன.

நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.ஐ.டி. நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT