சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு மே 21-ல் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (‘க்யூட்’) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த கல்வியாண்டில் (2023-24) ‘க்யூட்’ தேர்வு அறிவிப்பை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும். இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். இதேபோல், முதுநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு அடுத்தாண்டு ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதற்கான தேர்வுக்கால அட்டவணையை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அடுத்த வாரம் வெளியிடும். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.