கல்வி

‘கரோனா பேட்ஜ்’ஜில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பதில் புதுச் சிக்கல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: ‘கரோனா பேட்ஜ்’ மாணவர்களுக்கு மார்ச் 2021-ல் மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சி சான்றிதழை தமிழக கல்வித்துறை அளித்தது. இந்த தேர்ச்சி சான்றிதழால், அன்றைய கல்வியாண்டில் அப்பாடத் திட்டத்தை பின்பற்றி, படித்தோர் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், இளநிலை தொழில்நுட்பம் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு முதல் மற்றும் முதன்மை என இருவகைகளில் நடத்தப்படுகின்றன.

ஜேஇஇ மெயின் தேர்வு - 2023க்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nta.nic.in) வெளியிட்டுள்ளது. தேர்வு நெருங்கியதும், தேர்வுகூட அனுமதி சீட்டு வெளியிடப்படும். ஜனவரி அமர்வுக்கு, டிசம்பர் 15 முதல் ஜனவரி 12, 2023 வரை இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுகள் ஜனவரி 24 முதல் தொடங்கும். இம்முறை தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். தற்போது, இதில் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதுச்சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோரில் ஒருவரான, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவர், நமது ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் பதிவில் கூறியதாவது:

மார்ச் 2021-ல் எனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அப்போது கரோனா காலமாக இருந்ததால் வகுப்புகள் நடைபெறவில்லை. ‘கரோனா பேட்ஜ்’ என்று குறிப்பிட்டு, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக, மதிப்பெண் இல்லாமல் அப்போது சான்றிதழ் தரப்பட்டது. புதுச்சேரியில் தமிழகப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின் படி இக்குழந்தைகள் அனைவருக்கும் மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சி சான்று மட்டுமே தரப்பட்டது. தற்போது 12-ம் வகுப்பு படிக்கும் எனது மகன், ஜேஇஇ நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்தான்.

அதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவிடாததால் விண்ணப்பிப்பதில் சிரமம் நிலவுகிறது. இப்பிரச்சினை இதர மாநிலங்களுக்கோ, சிபிஎஸ்இ படித்தோருக்கோ இல்லை என தெரிகிறது. தமிழகப் பாடத்திட்டத்தை படித்தோருக்கு மட்டுமே இருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “இது தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அனுப்புகிறோம். தமிழக கல்வித்துறைக்கும் தகவல் அனுப்புகிறோம். தேசிய தேர்வு முகமைதான் இறுதி முடிவு எடுக்க இயலும்” என்று குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை உயரதிாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிளஸ் 2 மாணவர்கள் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிப் பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதை சரிபார்த்து, தேசிய தேர்வுகள் முகமையின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’’என்று தெரிவித்தனர். இவ்விஷயத்தில் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT