சென்னை: நடப்பு கல்வியாண்டில் ஓய்வுபெறவுள்ள அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுடன் (2022-23) ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் தங்கள் பணிக் காலங்களில் கையாண்ட வரவு - செலவு கணக்குகளை தணிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்த தணிக்கை முடிக்கப்பட்டு தடையின்மைச் சான்று வழங்கப்பட்ட பின்னரே சார்ந்த தலைமையாசிரியர்கள், அலுவலர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும்.
எனவே, இந்த கல்வியாண்டில் ஓய்வு பெறவுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அறிக்கையாக தயாரித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறை: இதனிடையே, அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் டிச.23-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. அதன்பின் விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதன்படி, 1 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு டிச.24 முதல் ஜன.1 வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.