கல்வி

என்டிஏ வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு: மே 7-ம் தேதி நீட் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. இதுதவிர ஜேஇஇ உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளுக்கான வருடாந்திர கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத் தின்கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட்,ஜேஇஇ, க்யூட் உட்பட பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான தேர்வுகள் குறித்த அட்டவணையை என்டிஏ நேற்று வெளியிட்டுள்ளது.

பொறியியல், மருத்துவம்: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு முதல்கட்டமாக ஜன.24 முதல் 31-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஏப். 6 முதல் 12-ம் தேதிவரையும் நடத்தப்படும். எம்பிபிஎஸ்உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதவிர மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவற்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட்)மே 21 முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐசிஏஆர்) ஏஐஇஇஏ நுழைவுத் தேர்வு மே 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT