கல்வி

தொடக்கப் பள்ளிகளில் டிச.13 முதல் 2-ம் பருவத் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் பருவத் தேர்வு டிச.13-ம் தேதி தொடங்குவதாக பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத் துக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை (Summative Assessment) டிச.13 முதல் 23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டை செயலி அல்லது எழுத்துப்பூர்வமாக நடத்திக் கொள்ளலாம். இதற்கான வினாத்தாள்களை அந்த செயலியிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வினாத்தாளை ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்து, அதன் அடிப்படையிலும் மாணவர்களை மதிப்பீடு செய்து கொள்ளலாம். எழுத்துப்பூர்வமான தொகுத்தறி மதிப்பீட்டின் மதிப்பெண் விவரங்களை செயலியில் பதிவேற்ற அவசியம் இல்லை. அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான தொகுத்தறி மதிப்பீடு பணிகளை நடத்தி முடிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT