சென்னை: பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, இந்திய மொழி திருவிழா நடத்த வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலர் பி.கே.தாகூர், அனைத்து பல்கலை. துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 75-வது ஆண்டு சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் டிச.11-ம் தேதி தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, இந்திய மொழிகள் குறித்த கண்காட்சி, மண்டல மொழிகளின் சிறப்பை விளக்கும் மையங்கள் அமைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகள், விநாடி-வினா, கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டி, என்மொழி என் கையெழுத்து பிரச்சாரம், மாணவர்கள் பல மொழிகளில் எழுதுவதற்கான வழிகாட்டியை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மறுநாள் நிகழ்ச்சி விவரங்களை யுஏஎம்பி இணைய முகப்பில் பதிவேற்ற வேண்டும்.