மதுரை: தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் வெறும் 5 பள்ளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 1,431 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளி மாணவர்களிடையே போட்டியை வளர்க்கவும், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பது உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில், ஆண்டுதோறும் சிறந்த ஒரு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியையும், ஒரு அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியையும் தேர்வு செய்து, தலா ரூ.5 லட்சம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் 2017-18 முதல் 2021-22 கல்வி ஆண்டு வரை மாநிலம் முழுவதும் 5 பள்ளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தெரிவித் துள்ளார். ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அவர் கேட்ட கேள்விகளுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையரகம் இந்த தகவலை அளித்துள்ளது.
இது குறித்து எஸ்.கார்த்திக் மேலும் கூறியதாவது: 2017-18-ம் ஆண்டு முதல் தற்போது வரை சிவகங்கை மாவட்டம், மல்லள் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி மாவட்டம் நல்லம்மாள்புரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (2018-19) உட்பட 5 பள்ளிகள் மட்டுமே ரூ.5 லட்சம் சிறப்பு நிதியை பெற்றுள்ளன. தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பள்ளிகூட இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் இத்திட்டத்தை ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக தலா ஒரு பள்ளியில் செயல்படுத்தினால் பள்ளிகள் இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும். அதற்கு ஆண்டுக்கு ரூ.1.90 கோடி செலவாகும்.
பயன்படுத்தாத நிதி: ஆண்டுதோறும் ஆதி திராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பல கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்படாமல் கஜானா வுக்கு திரும்ப அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அனுப்பும் நிதியில் ரூ.1.90 கோடியை மட்டும் செலவிட்டால் ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.