கல்வி

100% தேர்ச்சி காட்டும் பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா - பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் 10, 12-ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால் அதன் முதல்வர், ஆசிரியர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் கல்வித் துறை சிறப்பு ஆணையர் ராம் பிரசாத் மனோகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கனவுப் பள்ளி என்ற புதிய‌ திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், பி.யூ.கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 100 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கீழ் இயங்கும் 164 பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைந்தால் அந்த பள்ளிகளின் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

நான் பெல்லாரி மாநகராட்சியில் பணியாற்றிய போது அங்கு இதே திட்டத்தை அறிவித்தேன். அப்போது 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்த அறிவிப்பின் காரணமாக அங்கு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்ததுடன் கல்வியின் தரம் உயர்ந்தது''என்றார்.

SCROLL FOR NEXT