சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி 12-ம் வகுப்புக்கும், ஏப்ரல் 6-ம் தேதி 10-ம் வகுப்புக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேற்று கூறியதாவது: 2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன.
மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 7,600 பள்ளிகளில் பயிலும் 8.80 லட்சம் மாணவர்கள், 3,169 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
அதேபோல, மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 7,600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் மாணவர்கள், 3,169 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும், ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 12,800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்கள், 3,986 மையங்களில் தேர்வெழுதுகின்றனர். மொத்தம் 27.30 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்கள் தேர்வு பயமின்றி, ஆசிரியர்கள் கற்பித்ததை நன்றாக மனதில்கொண்டு தேர்வெழுத வேண்டும். தேர்வுக்காக இப்போதே தயாராக வேண்டும். பொதுத்தேர்வுக்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். இவை பிப்ரவரியில் தொடங்கி மார்ச் 2, 3-வது வாரத்துக்குள் முடிவடையும். அதற்கும் மாணவர்கள் நன்றாகத் தயாராக வேண்டும். படிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டாம். பெற்றோரும் மாணவர்களுக்கு அழுத்தம் தராமல், தட்டிக் கொடுத்து படிக்கவைக்க வேண்டும்.
பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை ஆசிரியர்களும் அறிந்து, உடனடியாக பாடங்களை முடித்து, மாணவர்களிடம் தேர்வு பயத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை தாங்களாகவே மேற்கொண்டு வருகின்றனர். எனவே, புதிய அறிவுறுத்தல்கள் வழங்க அவசியமில்லை.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை தனித் தேர்வு நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் தேர்வு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.