சென்னை: 10-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளை வட இந்தியாவுக்கு 7 நாள் கல்வி சுற்றுலா அனுப்பியுள்ளது சென்னை மாநகராட்சி.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 50 மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு தேசிய கல்வி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, 2022-23ம் கல்வியாண்டில் தேசிய கல்விச் சுற்றுலாவிற்கு 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சென்னைப் பள்ளிகளிலேயே 11ம் வகுப்பு பயிலும் 50 மாணவ, மாணவிகள் (10 மாணவர்கள், 40 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு தேசிய கல்விச் சுற்றுலாவாக சண்டிகர், சிம்லா மற்றும் டெல்லி ஆகிய வட இந்தியப் பகுதிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர்.
இந்த மாணவ, மாணவிகளை மேயர் ஆர்.பிரியா இன்று (அக்.31) பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார். மேலும், இவர்களுக்கு மேயர் மற்றும் துணை மேயரின் சார்பில் இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
இவர்களுடன் மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 5 ஆசிரியர்களும், ஒரு உதவிக் கல்வி அலுவலரும் உடன் செல்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவினங்களை சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாணவ, மாணவியர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு 8-ம் தேதி அன்று சென்னைக்கு திரும்புகின்றனர்.