கல்வி

‘டெட்’ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு - ஆட்சேபங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

செய்திப்பிரிவு

சென்னை: டெட் தேர்வின் விடைக்குறிப்பு தொடர்பான ஆட்சேபங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த டெட் தேர்வு, மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சிபெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2-ம்‌ தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும்‌ விண்ணப்பித்தனர்‌.

இவர்களுக்கான தேர்வை2 கட்டமாக நடத்த தேர்வு வாரியம்முடிவு செய்தது. முதல் தாள் தேர்வு அக்.14 முதல் 19-ம் தேதிவரை கணினி வழியில் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு (கீ ஆன்சர்), டிஆர்பியின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் இருந்தால், அதன் விவரங்களை சான்றுகளுடன் இன்று (அக்.31) மாலை 5.30மணிக்குள் டிஆர்பி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT