புதுக்கோட்டை: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு அரசு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு, நவ.1-ம் தேதி முதல் அந்தந்த கல்வி நிலையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு தற்போது கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கல்லூரிகளில் முதலாண்டு பயிலும் மாணவிகள் இந்த திட்டத்தில் சேருவதற்கு அந்தந்த கல்லூரிகளில் நவ.1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் உரிய சான்றுகளுடன் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். கல்வி நிலையங்களைத் தவிர, தனியாக விண்ணப்பிக்கக் கூடாது. ஏற்கெனவே பதிவு செய்யத் தவறிய 2,3,4-ம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகளும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை 9150056809, 9150056805, 9150056801, 9150056810 ஆகிய எண்களில் சமூக நலத் துறை அலுவலர்களிடம் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.