மகரிஷி சாந்தீபனி ராஷ்டிரிய வேத சம்ஸ்கிருத சிக்ஷா வாரிய(எம்எஸ்ஆர்விஎஸ்எஸ்பி) பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ ஆலோசகர் ரமேஷ் உன்னி கிருஷ்ணன், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியசுற்றறிக்கை:
பள்ளிக் கல்விக்காக மகரிஷி சாந்தீபனி ராஷ்டிரிய வேத சம்ஸ்கிருத சிக்ஷா என்னும் வாரியத்தை மகரிஷி சாந்தீபனி ராஷ்டிரிய வேதவித்யா பிரதிஷ்டான் அமைப்பு தொடங்கியுள்ளது.
விதிப்படி இந்த வாரியம் உருவாக்கப்பட்டதா, தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளதா என மத்திய கல்விஅமைச்சகம், என்சிஇஆர்டி ஆகியவற்றுடன் இணைந்து, ஆய்வு செய்த பிறகே, இந்த வாரியத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் இருப்பதுபோல 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடத்தவும் மகரிஷி சாந்தீபனி ராஷ்டிரிய வேத சம்ஸ்கிருத சிக்ஷா வாரியத்துக்கு இந்திய பல்கலைக்கழக சங்கம் அதிகாரம் வழங்கியுள்ளது.
எனவே, இங்கு வழங்கப்படும் வேத பூஷண், வேத விபூஷண் சான்றிதழ்களை, 10, 12-ம் வகுப்புகளுக்கான கல்விச் சான்றிதழ்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.