சென்னை: 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு செப்.26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 4 மற்றும் 5-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும்ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள், அனைத்து அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் குறுந்தகடு வடிவில் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித் துறையால் கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி 4 மற்றும்5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வை, முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு பாடவாரியாக விடைக்குறிப்புகளும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத்தேர்வு செப்டம்பர் 26-ம் தேதியும், ஆங்கிலம் 27-ம் தேதியும், கணக்கு 28-ம்தேதியும், அறிவியல் 29-ம் தேதியும், சமூக அறிவியல் 30-ம் தேதியும் நடத்தப்படும். தேர்வுகள் காலை10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.