மதுரை: தமிழகத்தில் பழமையான பள்ளிக் கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த செந்தில் முருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டிடங்கள் அதிகளவில் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டிடங்கள், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் மோசமான நிலையில் உள்ளது. மதுரை, கோவை, நெல்லை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
சமீபத்தில் மதுரை கொடிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. எனவே, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களில் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிம் அமைக்க குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.