கல்வி

ஆசிரியர்களுக்கு மனஅழுத்தம் தரும் வகையில் கல்லூரி நிர்வாகம் செயல்படக் கூடாது - தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய ஜி.ரவி என்பவர் 2020, மார்ச் 17-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி நிர்வாகம் முறையான ஊதியம் வழங்காதது, அசல் சான்றிதழ்களை திருப்பித் தராதது ஆகியவையே ரவியின் தற்கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும், மாநில உயர்கல்வித் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக் கோரி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்லூரி நிர்வாகங்கள், பணியில் சேரும் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பெற வேண்டாம். அதற்கு பதிலாக நகல் சான்றிதழ்களை வாங்கி கல்லூரி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதேபோல், மாணவர் சேர்க்கை பணிகளை செய்வதற்கும் ஆசிரியர்களை வற்புறுத்தக் கூடாது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தலின்படி ஊதியம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து திடீர் ஆய்வு மூலம் உறுதிப்படுத்துவது அவசியம். பணி நியமனம், ஊதிய நிர்ணயம், நிர்வாக விதிமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஆசிரியர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகளை கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொள்ளக் கூடாது. ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பணிகளைத் தவிர யோகா உள்ளிட்ட மனஅழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT