சென்னை: பிளஸ் 2-க்குப் பிறகு என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகளுடன் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, ‘சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி’ இணைந்து, ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ எனும் ஆன்லைன் ஆலோசனை நிகழ்ச்சியை நாளை (ஆகஸ்ட் 24) நடத்துகின்றன.
உயர்கல்வியைக் கற்று, வாழ்வின் அடுத்தக்கட்ட உயரங்களைத் தொட விரும்புபவர்களுக்கான படிக்கட்டுகளை அமைத்துத் தரும் எண்ணத்தோடு இந்த நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில், சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், வரங்கல் என்ஐடி முன்னாள் மாணவரும், தொழில் வழிகாட்டி ஆலோசகருமான ஆர்.அஸ்வின், சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி சிவில் துறைத் தலைவர் டாக்டர் ஆர்.மாலதி, சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி ஃபேஷன் டெக்னாலஜி துறைத் தலைவர்டாக்டர் டி.ராஜா ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்புபவர்கள், https://www.htamil.org/00762 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.