ஆஸ்திரேலிய நாட்டின், மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அறிவியல் பிரிவில் பி.எஸ்சி., (பிளெண்டட்) இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில், இரு புதிய இளநிலை பட்டப்படிப்புகளை பாரதியார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு முதல் இவ்விரு படிப்புகளிலும், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், மாணவர்கள் இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பிளஸ் 2-ல், இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்ற மாணவர்கள், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழகத்தின் www.b-u.ac.in மூலம் வரும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் கூறும்போது, “ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் வழங்கிய இந்த பாடத்திட்டம் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளை சரியான விகிதத்தில் உள்ளடக்கியது. ‘பிளெண்டட்’ என்ற கருத்து, நான்கு பாடங்களின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது.
இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை முதல் நான்கு செமஸ்டர்களிலும், கடைசி இரண்டு செமஸ்டர்களில் இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை விளக்கமாக படிக்கலாம். ஆன்லைன் மற்றும் வழிகாட்டுதல்களை, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் குழு அவ்வப்போது வழங்கும்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்துக்கு இணையாக, இந்திய மாணவர்கள் தகுதியான பட்டப்படிப்பைப் பெறுவதற்கும், அதன் மூலம் ஆஸ்திரேலியாவிலும், வெளிநாடுகளிலும் முதுநிலைப் படிப்பைத் தொடரவும், இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றார். மேலும் விவரங்களுக்கு, 0422 - 2428160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.