கல்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் ஆகியும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தவிப்பு

சி.பிரதாப்

சென்னை: பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் ஆகியும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கற்றலில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆசிரியர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 52.76 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.20 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இதற்கிடையே, தொடக்க கல்வித் துறையில் 2013-14 கல்வி ஆண்டு முதல்ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படாதது, மாணவர் சேர்க்கை அதிகரித்தது போன்ற காரணங்களால் கடந்த கல்வி ஆண்டு இறுதியில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை 13,331 ஆக உயர்ந்தது.

அதன்பிறகு மே மாதத்தில் ஓய்வு பெற்றவர்கள், புதிய சேர்க்கைக்கு ஏற்ப கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டால், அரசுப் பள்ளிகளுக்கு 17ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுதவிர, அடுத்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கேற்ப, பள்ளிக்கல்வி துறை முன்கூட்டியே திட்டமிட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவில்லை. அதன் விளைவாக, தமிழகம் முழுவதும்3,500-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை ஓராசிரியர்களே தற்போது கவனித்து வருகின்றனர். மேலும், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர் சேர்க்கையும் சரிந்து வருகிறது.

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. அதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், நீதிமன்றத்தில் சில பட்டதாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதனால், திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தற்காலிக நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மற்றொரு வழக்கில், விதிகளை திருத்தி தற்காலிக ஆசிரியர் நியமனத்தை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் தேர்வுப்பணிகள் கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கப்பட்டன. மொத்தம் உள்ள 11,874 காலிஇடங்களில் இதுவரை 2,600 பேர் வரைமட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம், பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

ஆசிரியர் பணிநியமனத்தை பொருத்தவரை, கூடுதல் தேவை உள்ள பணியிடங்களுக்கு அரசு இன்னும் அனுமதிவழங்கவில்லை. அதனால், ஏற்கெனவே உள்ள காலி இடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு கல்வித் துறை திட்டமிட்டது. எனினும், டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்யவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பணிக்கு விண்ணப்பித்த 1.50 லட்சம் பட்டதாரிகளில் 28,984 பேர் மட்டுமே டெட் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அப்பகுதிகளில் தற்காலிக நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் உள்ளது.

மறுபுறம், முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு வாரியம் மூலம் 3,237 பட்டதாரிகள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். தவிர, தற்காலிக பணி ஓரிரு மாதத்துக்கே கிடைக்கும். மேலும், பட்டதாரிகள் பலர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதால், இந்த பணிக்கு ஆர்வம் காட்டுவது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரே ஒரு ஆசிரியர்

ஓய்வுபெற்ற ஆசிரியர் கு.பால்ராஜ் கூறும்போது, ‘‘சில மாவட்டங்களில் மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் அனுப்பப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற பகுதிகளில் மாணவர்களுக்கு முழுமையான கற்றல், கற்பித்தலை வழங்க முடியாத சூழல் நிலவுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அரசுப் பள்ளியில் 11, 12-ம் வகுப்புகளை கவனித்துகொள்ள ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

செப்டம்பர் இறுதியில் காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், பல அரசுப் பள்ளிகளில் முதல் பருவப்பாடங்கள்கூட இன்னும் நடத்தி முடிக்கப்படவில்லை. ஏற்கெனவே கரோனா பரவலால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வி துறை கவனம் செலுத்தாவிட்டால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இதன் தாக்கம் சமூகத்தில் எதிரொலிக்கும்.

தற்போதைய சூழலில் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமனம் செய்வதே சரியானது. மேலும், டெட் தேர்ச்சி பெற்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிக்கு காத்துள்ளனர். அவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் பணிநியமனம் செய்ய அரசு முன்வரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT