கல்வி

பொறியியல் கலந்தாய்வில் கல்லூரிகள் தேர்வில் கவனம் தேவை - மாணவர்களுக்கு கல்வியாளர்கள், நிபுணர்கள் அறிவுறுத்தல்

சி.பிரதாப்

பொறியியல் கலந்தாய்வில் கல்லூரிகள் தேர்வில் நிகழும் சிறு தவறுகளால் நல்வாய்ப்புகளை மாணவர்கள் இழக்க நேரிடும். எனவே, கலந்தாய்வில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று கல்வியாளர்கள், நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் ஆனந்தம் செல்வக்குமார் கூறியதாவது:

கல்லூரி, பாடப்பிரிவு பட்டியல்

கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் நல்ல கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் சரியாகப் பதிவு செய்யாததால் சிறந்த கல்லூரிகளில் இடம்பெறத் தவறிவிட்டனர். இதைத் தவிர்க்க, கலந்தாய்வில் எந்தெந்த கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதற்கான விருப்பப்பதிவில் (Choice Filling) சேர்க்க விரும்பும் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்துகொள்ள வேண்டும்.

இந்தப் பணிகளை கலந்தாய்வுக்கான விருப்பப் பதிவு தொடங்கிய பின்னர் மேற்கொண்டால் அவசரத்தில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அதேபோல், விருப்பப் பதிவில் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். எனவே, கூடுமானவரை வாய்ப்புள்ள அதிக கல்லூரிகளை மாணவர்கள் பதிவு செய்வது நல்லது. மாவட்டம், பாடம், கல்லூரி பெயர், கோடு அடிப்படையில் விருப்பப் பட்டியலை தயாரிக்கலாம். கல்லூரி பெயரைவிட அதன் எண்ணுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ஏனெனில் ஒரே மாதிரியான பெயரில் சில கல்லூரிகள் இருப்பதால் தவறுகள் ஏற்படக்கூடும்.

இதுதவிர, விருப்பப் பதிவில் வரிசைப்படுத்தும்போது முதன்மையாக எந்தக் கல்லூரியைக் குறிப்பிடுகிறோமோ அதுவே ஒதுக்கப்படும். எனவே, தரமான கல்லூரிகளை முதன்மையாகப் பட்டியலிட வேண்டும். விருப்பப் பட்டியலை 3 நாட்களுக்குள் உறுதிசெய்ய வேண்டும்.இல்லையெனில் பட்டியலை கணினி தானாகவே இறுதி செய்துவிடும்.

தற்காலிக ஒதுக்கீடு

அதன்பின் தரவரிசையின்படி மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்படும். பெரும்பாலான மாணவர்கள் இங்கு தவறிழைக்கின்றனர். இது தற்காலிக ஒதுக்கீடு மட்டும்தான். எனவே, மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டை உறுதிசெய்வது மிகவும் அவசியம்.

இதையடுத்து தற்காலிக ஒதுக்கீட்டில் ‘முதல் விருப்பம் ஒதுக்கப்பட்டது’, ‘வேறு விருப்பம் வழங்கப்பட்டது’, ‘ஒதுக்கீடு செய்யப்படவில்லை’ என 3 விதமான பதில்கள் கிடைக்கும். அதில் முதலாவது விருப்பம் கிடைத்தால் ‘இப்போதைய ஒதுக்கீட்டை ஏற்கிறேன்’, ‘அடுத்த சுற்றுக்குச் செல்கிறேன்’, ‘கலந்தாய்வில் இருந்து வெளியேறுகிறேன்’ என 3 பிரிவுகள் இருக்கும். அதில் ஒன்றை உறுதிசெய்ய வேண்டும்.

2-வது வேறு விருப்பம் ஒதுக்கப்பட்டால், ‘இந்த ஒதுக்கீட்டை ஏற்கிறேன்’, ‘இப்போதைய ஒதுக்கீட்டை ஏற்கிறேன்; ஆனால், முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற வழி இருந்தால் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’, ‘முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற மட்டும் விரும்புகிறேன்’, ‘அடுத்தகட்ட கலந்தாய்வுக்கு செல்கிறேன்’,‘கலந்தாய்வில் இருந்து வெளியேறுகிறேன்’ என 5 பிரிவுகள் இருக்கும். இதில் ஒன்றை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த வாய்ப்பில் ஒதுக்கீட்டை ஏற்பவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஏனெனில், முந்தைய நிலையில் காலியிடம் இருந்தால் அவை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

3-வது எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை எனில், ‘முந்தைய விருப்பப் பதிவுக்கு முன்னேற வாய்ப்பிருந்தால் அதை ஏற்கிறேன்’. ‘இல்லையெனில் அடுத்த சுற்றில் பங்கேற்கிறேன்’, ‘கலந்தாய்வில் இருந்து வெளியேறுகிறேன்’ என 3 பிரிவுகள் இருக்கும். இவைகளில் ஒன்றைத் தேர்வு செய்து உறுதிமொழி அளித்து ஒப்புதல் தரவேண்டும்.

அதன்பின் இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் கல்லூரியில் சேரலாம். இல்லையெனில் இடம் ஒதுக்கீடு செய்ததற்கான சேர்க்கை கடிதம் கிடைக்காது. எனவே, அனைத்தையும் முழுமையாக படித்துவிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொறியியல் கல்வியைப் பொறுத்தவரை எந்தக் கல்லூரியில் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் விரும்பிய கணினி அறிவியல் பாடத்தை சுமாரான கல்லூரியில் பயில்வதைவிட எதிர்கால நலன்கருதி சிறந்த கல்லூரியில் மின்னணுவியல், எலக்ட்ரிக்கல் போன்ற வேறு பாடங்களைத் தேர்வு செய்வது நல்லது.

மேலும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், முந்தைய ஆண்டுகளின் தேர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உட்பட காரணிகளைக் கொண்டு சிறந்த கல்லூரிகளைத் தேர்வுசெய்யலாம்.

கட்டணம் செலுத்த புதிய முறை

இந்தாண்டு கலந்தாய்வில் அரங்கேறியுள்ள மற்றொரு மாறுதல், கல்விக் கட்டணம் செலுத்தும் நடைமுறையாகும். அதன்படி சேர்க்கை கடிதம் பெற்ற 7 நாட்களுக்குள் மாணவர்கள் கல்லூரிக்கு கட்டணத்தை முழுமையாகச் செலுத்தி, அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ரத்து செய் யப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT