கல்வி

3 மாதத்துக்கு ஒருமுறை மாணவர்களுக்கு மனநல ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் பேசும்போது, ‘‘சிக்கனமாக, தன்னம்பிக்கையோடு, இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்றசிந்தனை கொண்டவர்கள் சாரணசாரணியர்கள். நிலாவில் கால் வைத்ததில் 11 பேர் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள். நாட்டின் எதிர்காலம் என்பது, நாம்படிக்கும் வகுப்பறையில் இருந்துவருகிறது. ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் மாணவரால்தான் வளமான நாட்டை உருவாக்க முடியும்’’ என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்று, பிளஸ் 1 வகுப்பிலும் அந்த பாடங்களுக்கு பதிலாக பிளஸ் 2 பாடங்களையே பல தனியார் பள்ளிகளில் நடத்தினர். அதனால்தான் பிளஸ் 1 பொதுத் தேர்வு உருவாக்கப்பட்டது. அது தொடர்ந்து நடத்தப்படும்.

நபார்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உள்ள கழிவறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாணவ, மாணவிகளின் மனநிலையை காக்கவும், தற்கொலை எண்ணத்தில் இருந்து அவர்களை மீட்கவும், சிறப்பு மருத்துவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலமாக 3 மாதத்துக்கு ஒருமுறை மனநல ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT