சென்னை: பொறியியல் கலந்தாய்வில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்கள், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள 1.50 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16முதல் அக்டோபர் 14-ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது.
2.12 லட்சம் பேர் விண்ணப்பம்
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி, ஜூலை 27-ல் நிறைவு பெற்றது. மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள 2,442 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
முதல் நாளில் 250 பேர்பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள்அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்த்து செல்ல வேண்டும்.
மேலும், விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பித்த சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதில் பங்கேற்கும் மாணவர்கள், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.