கடலூர்: மேல்நிலைப் பள்ளி முதலாண்டு தொழிற் கல்வி பாடத்தில் நடைமுறையில் இருந்த பாடங்கள் நீக்கப்பட்டு, புதிய பாடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பள்ளிகளில் மேல்நிலை முதலாமாண்டு தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு கணினி பயன்பாடுகள், கணினி தொழில் நுட்பம் ஆகிய பாடங்கள் நடைமுறையில் இருந்து வந்தது.
மாணவர்களின் நலன் கருதி,மேற்கண்ட இரு தலைப்பிலான பாடங்களையும் நீக்கி விட்டு நிகழாண்டு முதல் "வேலைவாய்ப்புத் திறன்கள்" என்ற புதிய பாடநூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடந்த 13-ம் தேதி வெளியிட்டது. புதிய பாட நூல் மின் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு (2022) கல்வியாண்டிலிருந்து முதன் முறையாக பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்கள் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வேலை தேடுபவர்களாகஅல்லாமல் மாணவர்களை வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக உருவாக்குவதே இந்த பாடத்தின் நோக்கமாகும் என்று இப்புத்தகத்தின் ஆசிரியர் குழுவினர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எந்த சுற்றறிக்கையும் பள்ளிகளுக்கு அனுப்பாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அறிவிப்பு வராத நிலையில், நீக்கப்பட்டபாடத்தையே நடத்துமாறு ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அரசுப் பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள தொழிற்கல்வி மாணவர்களின் குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.