மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவிகளுக்காக டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காத்திருந்த பெற்றோர்கள். மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதிலும் 500 மையங்களிலும் வெளிநாடுகளில் 10 மையங்களிலும் நேற்று நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெறும் முதல் கட்ட தேர்வில் மொத்தம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அடுத்த கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.படம்: பிடிஐ 
கல்வி

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இளங்கலை பட்ட வகுப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் பொது பல்கலை நுழைவுத்தேர்வின் மையங்கள் மாறியதால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வாய்ப்பு தரப்படும் என தேசிய திறனறி சோதனை முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் புதிய ஜல்பைகுரி மற்றும் பஞ்சாப் மாநிலம் பதான் கோட் ஆகிய பகுதிகளில் இரு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த மையங்களில் 190 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் தேர்வில் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சில தேர்வு மையங்கள் மாறியதால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தேர்வில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளங்கலை பட்டத்திற்கான பொது பல்கலை நுழைவுத் தேர்வுமுதல் முறையாக 510 மையங்களில் நேற்று நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் சில மையங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

பொது பல்கலை நுழைவுத் தேர்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 14.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மத்திய பல்கலை.யில் சேர்வதற்கு இந்த தேர்வு மதிப்பெண் மிகவும் அவசியமாகும்.

SCROLL FOR NEXT