ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள டி.குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்க நாதன் மகள் பொம்மி(27). ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் கடந்த 7 ஆண்டுகளாக அக்கிராமத்தில் உள்ள 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தனது இல்லத்தில் பாடம் நடத்தியும், பள்ளிகளில் ஆசிரியர்கள் வழங்கும் செய்முறை பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 25 குழந்தைகளுக்கு மாலை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை இலவசமாக பாடம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் அப்பகுதியில் ஆய்வுக்காக சென்ற இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொம்மியின் செயலைக் கண்டு அவரை பாராட்டினார். மேலும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலராக இணையத்தில் விண்ணப்பிக்குமாறும், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பாடம் நடத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து பொம்மி கூறியதாவது, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அரசு அறிவிக்கும் முன்னரே ஏழு ஆண்டுகளாக இலவசமாக பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறேன். ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து மாற்றுத்திறனாளியாக இருந்தும் அரசு வேலை கிடைக்காமல் வறுமையில் இருந்து வருகிறேன்.
குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் ஏழை, விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகிறேன். தற்போது இல்லம் தேடி கல்வி திட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளேன். மேலும் தமிழக அரசு மாற்றுத்திறனாளியான எனது சூழ்நிலை கருதி அரசுபணி வழங்க வேண்டும், என்று கூறினார்.