கல்வி

பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதியமாணவர்களுக்கான விடைத்தாள் நகல் இன்று (ஜூலை 14) வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில், விடைத்தாள் பிரதி கோரி விண்ணப்பித்தவர்களின் நகல்கள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. இதை மாணவர்கள் www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதன் பின்னர், மறுகூட்டல்அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளம் வழியாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 2 நகல்கள் எடுத்து நாளை (ஜூலை 15) முதல் ஜூலை 19-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டண விவரம்

மாணவர்கள் மறுமதிப்பீடுக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305, இதரபாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT