அரசின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு காரணமாக, புதிதாக தொடங்கப்பட்ட தாளவாடி அரசு கல்லூரியில் சேர மலைக் கிராம மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அந்தியூரில் இருபாலருக்கான அரசு கலைக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, இதில், தாளவாடி அரசு கல்லூரி தற்காலிகமாக திகினாரை அரசுப் பள்ளியில் செயல்படுகிறது. இக்கல்லூரிகளில் பிஏ (ஆங்கிலம், தமிழ்), பி.எஸ்சி., (கணிதம், கணினி அறிவியல்) பி.காம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் 17-ம் தேதி வரை, மாணவ, மாணவியர் www.tngasa.in மற்றும் www.tngasa.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வந்து 5 நாட்களுக்கு பின்னரே மாணவர் சேர்க்கை நிறைவடையும்.
வரவேற்பு
இந்நிலையில், மலைக் கிராமமான தாளவாடியில் தொடங்கப்பட்டுள்ள அரசு கல்லூரிக்கு மாணவர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தாளவாடியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் உயர்கல்வியில் சேர ஆர்வமாய் விண்ணப்பித்துள்ளனர்.இக்கல்லூரியில் சேர 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இரு மடங்கு அதிகரிப்பு
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தாளவாடி அரசு கல்லூரியில் 5 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவுக்கு 60 பேர் வீதம், மொத்தம் 300 மாணவ, மாணவியர் கல்வி பயில முடியும். ஆனால், தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இணையம் மூலம் இக்கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதில், கணினி அறிவியல், வணிகவியல் பாடத்துக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதி, இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இறுதி நாளில் நடைபெறும்.
கல்வி உதவித்தொகை
தாளவாடி மலைப்பகுதியில் செயல்படும் நான்கு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 400 பேர் உயர்கல்வி பயில வருகின்றனர். இதில், 70 சதவீதம் பேர் இந்த கல்லூரிக்கு வந்தாலே 300 இடங்களும் நிரம்பி விடும்.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக, பிளஸ் 2 முடித்த தாளவாடியைச் சேர்ந்த மாணவிகள், சத்தியமங்கலம் உள்ளிட்ட வெளி இடங்களுக்கு உயர்கல்வியில் சேர செல்ல முடியவில்லை.
தற்போது, தாளவாடியில் கல்லூரி தொடங்கப்பட்டதால், அவர்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள கல்லூரி மாணவிகளுக்கான மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டமும் மாணவியர் சேர்க்கை அதிகரிக்க காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.