புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள மதியநல்லூரில் செயல்பட்டு வந்த அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 2012 முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரையும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் பாராட்டினர். இந்நிகழ்ச்சிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவருமான வி.ராமசாமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் தர்மசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.