கல்வி

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அங்கீகாரம் பெறும் கல்லூரிக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படும். அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2022-23) இணைப்பு அங்கீகாரம் கோரி 476 தனியார் கல்லூரிகள் விண்ணப்பித்தன.

இந்த கல்லூரிகளில் பல்கலை.குழுவினர் கடந்த மே, ஜூன் மாதங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் முழுமையான கட்டமைப்பு வசதிகளின்றி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கல்லூரிகளை நடத்துவதற்கான முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கட்டமைப்பு குறைபாடுகளை 2 வாரத்தில் சரிசெய்தால் மட்டுமே நடப்பாண்டு இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலை.அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கரோனா பரவலால் கல்லூரிகள் 2 ஆண்டுகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் முன்னணி கல்வி நிறுவனங்கள் தவிர்த்து மற்ற கல்லூரிகள் கட்டமைப்பு வசதிகளை பராமரிக்கவில்லை.

அதன்படி 225 தனியார் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான குறைபாடுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அங்கு தேவையைவிட குறைந்த ஆசிரியர்களே இருந்தனர். சில கல்லூரிகளில் தரமான ஆய்வக வசதிகள் இல்லை. அந்த 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கட்டமைப்பு குறைபாடுகளை இருவாரத்தில் சரிசெய்து விளக்கம் அளிக்காவிட்டால் நடப்பாண்டில் அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 23 கல்லூரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு தகுதியற்றவர்கள் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த கல்லூரிகளில், விதிமுறைகளின்படி புதிய முதல்வர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், 50 சதவீதத்துக்கும் குறைவான குறைபாடுடைய கல்லூரிகள் மாற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதேநேரம் 25 சதவீதத்துக்கும் குறைவான முரண்பாடுகள் கொண்ட கல்லூரிகளுக்கு மட்டும் அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு தலையிட வேண்டும்

தனியார் கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா பரவலால் கல்லூரி வளாகங்களை பராமரிப்பதில் 2 ஆண்டுகளாக பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கட்டமைப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், 225 கல்லூரிகளுக்கு மட்டும் விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை. நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியாக உள்ளது.

ஏனெனில், ஆய்வில் 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது கண்டறியப்பட்டது. ஆனால், அரசியல் பின்புலம் உள்ள கல்லூரிகள் மட்டும் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அனைத்து கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள உரிய காலஅவகாசம் தர முன்வர வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT