சென்னை: மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்ற ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 5-ல் வெளியாக உள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 7, 8-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்படுகின்றன.
அதன்படி ஏற்கெனவே இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். ஒன்றிய கலந்தாய்வில் விருப்ப மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட மாறுதலில் பங்கேற்க அனுமதி இல்லை. உபரி ஆசிரியர்களாக இருந்து பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் மற்றும் மழலையர் வகுப்பில் இருந்து இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 5-ம் தேதி வெளியிடப்படும்.
மலைப்பகுதிக்கு மாறுதல் பெற்றவர்கள், தற்போது இடமாறுதலுக்கு தேர்வு செய்யும் இடத்தில் ஓராண்டு மலைப் பணியை முடித்த பின்னரே சேர முடியும். அதுவரை,அந்த இடம் காலியாக வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.