கல்வி

அனைத்து மாவட்டத்திலும் புத்தக காட்சி நடத்த ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4 கோடியே 96 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை:

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

இதை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையரைத் தலைவராகவும், பொது நூலக இயக்குநரை உறுப்பினர் செயலராகவும், 4 உறுப்பினர்களைக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்துக்கான செலவினம் மேற்கொள்ள பொது நூலக இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு தேவைப்படும் மொத்தத் தொகை ரூ.4 கோடி 96 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT