சென்னை: அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்திவைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த முன்னுரிமைகளைப் பின்பற்றாமல், தங்கள் விருப்பப்படி ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வருகின்றன. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான வழிமுறைகள் வழங்கப்படும் வரை, தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கூடாது.
மேலும், இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பிவைக்கப்பட உள்ளன. அதற்குப் பின்னர், உரிய முன்னுரிமைகளைப் பின்பற்றி, தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். இதை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.