கல்வி

இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்கிய அப்துல் கலாம் - அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கியவர் அப்துல் கலாம் என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ இணைய வழி கலந்துரையாடல் நிகழ்வில் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவை போற்றும்வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 26-ம் தேதி நடந்தது. இதில், அப்துல் கலாமின் அண்ணன் மகளும், கலாம் அறக்கட்டளை தலைவருமான டாக்டர் ஆ.ப.ஜெ.மு.நசீமா மரைக்காயர், ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு இருவரும் கலந்துரையாடினர். அவர்கள் கூறியதாவது:

டாக்டர் ஆ.ப.ஜெ.மு.நசீமா மரைக்காயர்: என் தந்தையின் உடன்பிறந்த சகோதரரான அப்துல் கலாம், எனது சித்தப்பா. நான் பள்ளியில் படித்தபோது ஒருநாள், ‘‘நீயும் நானும் ஒரே பள்ளி’’ என்றார் சித்தப்பா. அதற்கு நான், ‘‘பள்ளியில் உங்களை பார்த்ததில்லையே” என்றேன். ‘‘இப்ப நீ படிக்கிற அதே பள்ளியில் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நான் படித்தேன்’’ என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னது மறக்க முடியாதது. சிறுவயதிலேயே அன்பாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பேசக்கூடியவர் கலாம்.

எங்கள் குடும்பத்தில் அனைவருமே புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார்கள். அந்த சூழலில் வாழ்ந்த கலாமும் சிறுவயது முதலே புத்தகங்கள் படிப்பதில் நாட்டம் கொண்டார். அவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியரான அய்யம் பெருமாள் கோனார் மூலமாக அவரது தமிழ் ஆர்வம் அதிகமானது. திருக்குறளை ஆழ்ந்து படித்து, அதன் கருத்துகளை மனதில் ஆழமாக ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆன், பகவத் கீதை, திருக்குறள் ஆகியவற்றை ஆழ்ந்து படிப்பார். படிக்கும் காலத்தில் மளிகைக் கடைக்கு உதவியாக வேலைகளையும் செய்வார். எதை செய்தாலும் அக்கறை, ஈடுபாட்டோடு செய்வது அவரது இயல்பு. யாருடைய விருப்பத்திலும் குறுக்கிடாமல், அவரவர் விரும்பியதை படிக்க தூண்டுகோலாக இருந்தார். குடும்ப உறவுகள், சொந்தங்களை போற்றிப் பாதுகாப்பவராக இருந்தார். இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கியவர் அப்துல் கலாம்.

ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு: தமிழகத்தில் பிறந்த அப்துல் கலாம், உலக அளவில் ராக்கெட் அறிவியல், தொழில்நுட்ப செயல்பாடுகளுக்காக பாராட்டப்பட்டவர். நாட்டின் முன்னேற்றம், மக்களுக்கான முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே அவரது பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் இருந்தன. எப்போதும் புத்தகங்களை வாசித்துக் கொண்டும், எதையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டும் இருந்த கலாம், ஓர் அபூர்வமான மனிதர்.

தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கலாம், பல நூல்களை எழுதியுள்ளார். எப்போதுமே அவரைச் சுற்றி புத்தகங்கள் இருப்பதை பார்க்கலாம். அக்னி ஏவுகணை சோதனை வெற்றிக்கு பிறகு, தேசமெங்கும் அனைவரும் அறிந்த ஆளுமையாக உயர்ந்தார் கலாம். முழு ஈடுபாட்டுடன் செயல்களை முன்னின்று நடத்துவதிலும், அனைவரையும் அன்புடன் அரவணைத்து செல்வதிலும் தனித்துவமான சிறப்புடன் விளங்கினார். அதனாலேயே எல்லோருக்கும் பிடித்த மனிதராக கொண்டாடப்பட்டார்.

இன்று அறிவியல், தொழில்நுட்பத் துறையிலும், ஏவுகணை தொழில்நுட்பத்திலும் ஆர்வத்துடன் செயல்படும் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் ஒரு முன்மாதிரி யார் என்றுகேட்டால், கலாம் பெயரைத்தான் அனைவரும் சொல்வார்கள். அந்த வகையில் வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00736 என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

SCROLL FOR NEXT