சிவகங்கை: தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ‘சர்வர்’ பிரச்சினையால் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் சுயவிவரம், வகுப்பு போன்ற விவரங்கள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை திட்ட (எமிஸ்) இணையதளத்தில் தலைமை ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் புதிய மாணவர்கள் சேர்க்கை, தேர்வு, தேர்ச்சி, போன்ற பள்ளி மற்றும் மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் அனைத்தும் எமிஸ் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் மாணவர்களுக்கான பள்ளி மாற்றுச் சான்றிதழை எமிஸ் இணையதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக எமிஸில் மாற்றுச்சான்றிதழ் பக்கத்தில் மாணவர் பெயர், பிறந்த தேதி, அங்க அடையாளம், நடத்தை, தேர்ச்சி, கல்வி பயின்ற காலம், முதல் மொழி, பயிற்று மொழி போன்ற விவரங்களை பதிவு செய்து, அவற்றை பதிவிறக்கம் செய்து தலைமைஆசிரியர் கையொப்பமிட்டு, பள்ளி ‘சீல்’ இட்டு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிழைகளை சரிசெய்யவும் தனியாக ‘எடிட்’ ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாற்றுச்சான்றிதழ் கேட்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் ‘சர்வர்’ பிரச்சினையால் எமிஸில் இருந்து மாற்றுச்சான்றிதழ்களில் திருத்தம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒரே சமயத்தில் மாநிலம் முழுவதும் எமிஸை பயன்படுத்துவதால்‘சர்வர்’ பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே பள்ளிகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளவும், அதன்பிறகு மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் பள்ளிகளை அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் பெற்றோர் சிலர் விடாப்பிடியாக மாற்றுச் சான்றிதழ் கேட்கின்றனர். இதனால் சற்று சிரமம் உள்ளது’ என்றனர்.