கல்வி

இல்லம் தேடிக்கல்வி மையங்களில் வாசிப்பு மாரத்தான் இயக்கம்: குழந்தைகள் 11 நாளில் 227 கோடி சொற்கள் உச்சரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: இல்லம் தேடிக் கல்வி மையங்களின் வாசிப்பு மாரத்தான் இயக்கம் மூலம் 11 நாட்களில் 227 கோடி சொற்களை குழந்தைகள் உச்சரித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக பள்ளிக்கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் தற்போது 33 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த ‘ரீடிங் மாரத்தான்’ என்ற தலைப்பிலான வாசிப்பு இயக்கம் கடந்த ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இதில் ஜூன் 11-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 227 கோடி வார்த்தைகளை குழந்தைகள் சரியாக வாசித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வாசிப்பு இயக்கத்துக்கு ஆரம்பம் முதலே குழந்தைகளிடம் வரவேற்பு இருந்தது. தன்னார்வலர்கள் செல்போன் வழியாக ‘கூகுள் ரீட் அலாங்’ செயலியைப் பயன்படுத்தி மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

இதில் ஜூன் 11-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 227 கோடி வார்த்தைகளை மாணவர்கள் சரியாக உச்சரித்துள்ளனர். அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் லால்குடி, மதுரை அலங்காநல்லூர், மேலூர், வேலூர் குடியாத்தம் ஆகிய வட்டாரங்கள் சொற்கள் வாசிப்பில் முன்னிலை வகிக்கின்றன. இதில் சிறப்பாக செயல்பட்ட கல்வி மையங்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாசித்தல் திறனை மேம்படுத்த ‘ரீடிங் மாரத்தான்’ என்ற தலைப்பிலான வாசிப்பு இயக்கம் கடந்த ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT