சென்னை: இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்லூரிகளில் சேர்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜிவ் குமார், அனைத்துவித கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
படிப்பைத் தொடர்வதில் சிரமம்
தவிர்க்க முடியாத காரணங்களால் கல்லூரிகளில் இருந்து இடைநின்ற மாணவர்கள் மீண்டும் சேர்க்கைப் பெற்று, தங்கள் படிப்பைத் தொடர்வதில் சிரமங்கள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், சில கல்வி நிறுவனங்கள், உடல் நலக்குறைபாடு ஏற்படும் மாணவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின்படி ஒரே நேரத்தில் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாணவர் ஒரு படிப்பில் இருந்து விலகி மீண்டும் அதைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களைச் சேர்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விபத்து, குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநின்றவர்கள் மீண்டும் படிக்க வந்தால், மாணவர்கள் நிறுத்திய நிலையில் இருந்து தொடர அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறையானது ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வதற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.