சென்னை: ஆசிரியர் பற்றாக்குறையை முன்வைத்து மழலையர் வகுப்புகளை அங்கன்வாடிகளுக்கு மாற்றினால் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை பின்னடைவைச் சந்திக்கும். எனவே, அவற்றை பள்ளிக்கல்வித் துறையே தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மான்டிசோரி கல்வி முறையில் மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
இந்த மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசு தொடக்கப்பள்ளியில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்து வந்தனர். அந்தவகையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் வகுப்பில் படிக்கின்றனர்.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் இயங்கிய மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஏற்கெனவே மழலையர் வகுப்புகளுக்கு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட 2,381 ஆசிரியர்கள் மீண்டும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அங்கன்வாடி மையங்களால் மழலையர் வகுப்புகளை முறையாக நடத்த முடியாத நிலை உள்ளதால் திட்டம் கைவிடப்படும் சூழலுக்கு வந்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் கு.செந்தமிழன் கூறியதாவது:
பள்ளிக்கல்வித் துறை எந்தவொரு செயல்பாட்டையும் தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடம் அதிகம் இருப்பதால் மழலையர் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றுவதாக கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டனர். இதுதவிர 2013-ம் ஆண்டுக்குப் பின் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதன் காரணமாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 9 ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. மேலும், வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் அவசரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உரிய காலத்தில் பணி நியமனம் செய்திருந்தால் இந்த சிக்கல் எழுந்திருக்காது.
முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கு தரும் முக்கியத்துவம், இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தரப்படுவதில்லை. மறுபுறம் அங்கன்வாடி மையங்களுக்கு பெற்றோரிடம் பெரிய அளவில் வரவேற்பில்லை. மேலும், அங்கன்வாடி பணியாளர்களால் மழலையர் வகுப்புகளை முறையாகக் கையாள முடியாது. எனவே, இந்த முடிவை கல்வித் துறை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியாளர் செல்வக்குமார் கூறியதாவது:
பெரும்பாலான பெற்றோர் தற்போது ஆங்கிலவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒரே வளாகத்தில் பள்ளியுடன் மழலையர் வகுப்பு இருந்தால் அதில் பயிலும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலும் தொடர்ந்து படிக்க வைக்க முடியும். அதற்கு மாறாக தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் சேரும் குழந்தைகளை மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்க்க பெற்றோர் முன்வர மாட்டார்கள். இது தொடரும்பட்சத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரியும் அபாயம் ஏற்படும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தக்கவைப்பதே பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் சேர்க்கையை தாமதமாகத் தொடங்குதல், மழலையர் வகுப்புகளை மூடல் உள்ளிட்ட சமீபகால நடவடிக்கைகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர்களிடம் நல்வரவேற்புள்ள இந்தத் திட்டத்தை முடக்கும் செயலும் கண்டிக்கத்தக்கது.
அங்கன்வாடி மையங்களை பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்பு பாடங்கள் கற்றுதரப்படாது. அடிப்படை கல்வித்திட்டமே செயல்படுத்தப்படும். அதனால் பெற்றோர் முதல் தேர்வாக தனியார் மழலையர் பள்ளிகளே இருக்கும். இதனால்தான் அனைத்து அரசுப்பள்ளி வளாகத்திலும் மழலையர் வகுப்பு தொடங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
நிதிப் பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் மான்டிசோரி பயிற்சி பெற்றுள்ள பயிற்றுநர்களைக் கொண்டு தொகுப்பூதியத்தில் தற்காலிக அடிப்படையில் மழலையர் வகுப்புகளை நடத்தலாம். அதேபோல், ‘இல்லம் தேடிக் கல்வி’ தன்னார்வலர்களையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சிறந்த மாற்று வழிகள் இருக்கும்போது மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த பள்ளிக்கல்வித் துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.