திருச்சி: எமிஸ் (EMIS) இணையதளம் செயல்படாததால் மாற்றுச்சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அலைக்கழிப்பு செய்வதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் (தரமான கல்வி, சமமான கற்றல், வரைவுகளை பெறுதல் போன்ற) பள்ளித்திறன் செயல்பாட்டுக்கான வளர்ச்சியை எளிதாகஉருவாக்கும் வகையில் எமிஸ் (கல்வி மேலாண்மை தகவல் மையம்) என்ற இணையதளம் பள்ளிக்கல்வித் துறையால் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில், மாநிலத்தில் உள்ள 58,897 பள்ளிகளின் தெரிவுநிலை மட்டுமின்றி, அதில்படிக்கும் மாணவர்களின் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களும் பதிவிடப்பட்டிருக்கும்.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளி திறக்கப்படவுள்ளது. இதையடுத்து, நிகழ் கல்வியாண்டில் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளியில் சேர உள்ள மாணவர்கள், பெற்றோருடன் தாங்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாற்றுச் சான்றிதழ் பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த பல நாட்களாக எமிஸ் இணையதளம் செயல்படாததால் மாற்றுச் சான்றிதழ் பெறமுடியாமல் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால், தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறுகையில், ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறித்து அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனியார் பள்ளிகளில் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்வதற்காக, தாங்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டால், எமிஸ் இணையதளம் செயல்படவில்லை என்றும், எப்போது செயல்படும் என எங்களுக்கு தெரியாது என்றும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்துஅறிவிப்பு வந்த பிறகுதான் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும் என்றும்அலட்சியமாக பதிலளிக்கின்றனர்.
பள்ளிகள் திறக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் எமிஸ் இணையதளம் செயல்படாத நாட்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால், தற்போது முறையான அறிவிப்பு வெளியிடாததால் பெரிதும் அவதியடைந்து வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய மாற்றுச்சான்றிதழில் கூடுதல் தகவல்கள் மற்றும் புதிய வெர்சன்இடம் பெறுவதற்கான மேம்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனால் ஜூன் 7-ம் தேதி முதல் எமிஸ் இணையதளம் செயல்படவில்லை. இதற்கான பணிகள் முடிவடைந்ததும் பள்ளிகளுக்கு முறையான அறிவிப்பு வெளியிடப்படும். எப்போது இணையதளம் செயல்படும் என்பதை எங்களுக்கே எமிஸ் அமைப்பு தெரிவிக்கவில்லை என்றனர்.