சென்னை: அரசுப் பள்ளி மாணவிகள் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகைபெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயனாளிகளை இறுதிசெய்வதற்காக, மேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே, இத்திட்டத்தில் பயன்பெற, மாணவிகள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வசதியாக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சமூக நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறையிடம் பெற்றுவிட்டோம். ஆனால், உயர்கல்வித் துறையில் அதுபோல விவரங்கள் தொகுத்து வைக்கப்படவில்லை. அந்தந்த கல்லூரிகளில் தனித்தனியாக விவரங்கள் பராமரிக்கப்படுவதால், மாணவிகளின் விவரங்களை விரைவாக பெறுவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும், உயர்கல்வித் துறை மூலமாக மாணவிகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம்.
இத்திட்டத்தில் பயன்பெற, மாணவிகள் விண்ணப்பிக்க தனிஇணையதளம், செல்போன் செயலியை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவடையும்.
இதுதவிர, நேரடியாக அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். இப்பணிகளை முடித்து, வரும் ஜூலை 15-ம் தேதிகாமராஜர் பிறந்தநாளில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பிற உதவித் தொகைகள் பெற்றுவந்தாலும் மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அரசிடம் கூடுதல் நிதி பெற்று வழங்கவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.