சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (‘க்யூட்’) 9.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டு முதல்இளநிலை, முதுநிலை படிப்புகளில்சேர பொது நுழைவுத்தேர்வு (‘க்யூட்’) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான ‘க்யூட்’ தேர்வு ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்பட வுள்ளது.
உத்தரப்பிரதேசம் முதலிடம்
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 7-ல் தொடங்கி மே 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வுக்கு 11.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 9.14 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். அதிகபட்சம் உத்தரப்பிரதேசத்தில் 2.86 லட்சம் மாணவர்களும், டெல்லியில் 1.33 லட்சம் பேரும், பிஹாரில் 70 ஆயிரம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
மே 31 வரை திருத்தம் செய்யலாம்
இதையடுத்து விண்ணப்பங்களில் மே 31-ம் தேதி வரை மாணவர்கள், திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வு வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை https://nta.ac.in/, https://cuet.samarth.ac.in/ ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ‘க்யூட்’ நுழைவுத் தேர்வை இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.