கல்வி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்: பச்சலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டைக்கு அடுத்த மாதம் வருகை தர உள்ள தமிழக முதல்வர், தங்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கி அருகே மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி முன்மாதிரி பள்ளியாக மாற்றிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி, அங்கிருந்து கடந்த 2019-ல் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றார்.

அங்கு, மக்கள் பங்களிப்பு, அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி அனைத்து வகுப்பறைகளிலும் தொங்குகூரை அமைத்தார்.

தரை தளங்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அனைத்து வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் போர்டு, ஏசி பொருத்தப்பட்டது. விளையாட்டு கருவிகளுடன்கூடிய கலையரங்கம், விளையாட்டு கருவிகளுடன்கூடிய சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இப்படியாக செயல்படும் இப்பள்ளிக்கு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதுக்கோட்டைக்கு வரவுள்ள தமிழக முதல்வர் வரவேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பச்சலூர் பள்ளி மாணவர்கள் கூறியதாவது: எங்கள் பள்ளி கரும்பலகை இல்லாத அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் பள்ளியாக செயல்படுகிறது. இந்த பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் டெல்லிக்கு சென்று அங்குள்ள அரசு முன்மாதிரியைப் பார்வையிட்டு வந்துள்ள தமிழக முதல்வர், நம் மாநிலத்தின் முன்மாதிரி பள்ளியாக திகழும் எங்கள் பள்ளிக்கும் வரவேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT