சென்னை: பொறியியல் கலந்தாய்வில் 10 தனியார் கல்லூரிகள் பங்கேற்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் உட்பட 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கும் பொறியியல் கல்லூரிகள், முன்கூட்டியே அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும்.
இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டுக்கான (2022-23) மாணவர் சேர்க்கை பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வில் பங்கேற்க உள்ள பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கப்போவதில்லை என்று 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் தெரிவித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினர்.
‘‘கடந்த சில ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்த காரணத்தால், இந்த ஆண்டு மேலும் குறையக்கூடும் என்று கருதி, அக்கல்லூரி நிர்வாகங்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். தேவைப்பட்டால் அக்கல்லூரிகள் வரும் ஆண்டுகளில் விண்ணப்பித்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம்’’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.