சென்னை: `இந்து தமிழ் திசை’ நாளிதழ், டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதும் மாணவ-மாணவிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ‘வெற்றி மேடை உனதே’எனும் போட்டித் தேர்வாளர்களுக்கான வழிகாட்டும் ஆலோசனைப் பகுதியை கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் வெளியிட்டு வருகிறது.
இந்தப் பகுதியை வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் வீ.நந்தகுமார் ஐஆர்எஸ் எழுதி வருகிறார். இதுவரை 14 பகுதிகள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையில், தமிழக அரசுத்துறைகளில் சார் பதிவாளர் உள்ளிட்ட 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த சனிக்கிழமை குரூப் 2, குரூப் 2-ஏ பதவிகளுக்கான போட்டித் தேர்வைடிஎன்பிஎஸ்சி நடத்தியது. போட்டித் தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில் பாடத் திட்டங்கள் பற்றிய குறிப்புகளும், மாதிரி வினாத்தாள்களும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வெற்றி மேடை உனதே’ பகுதியில் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக, தேர்வு நடைபெற்ற அன்று, மாணவ-மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டிய 19 முக்கியக் குறிப்புகளையும், மதிப்பெண் பிடித்தம் குறித்த 5 குறிப்புகளையும் தமிழாக்கம் செய்து தந்திருந்தார் வீ.நந்தகுமார்.
இது தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தது என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து குரூப் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறும்போது, ‘‘வெற்றி மேடை உனதே’ பகுதியில் இதுவரை இடம்பெற்ற 75 மாதிரி வினாக்களில் 15 வினாக்கள், அதாவது 20 சதவீத வினாக்கள் குரூப் 2 தேர்வுக்கான கேள்வித்தாளில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளித்தது.
இதனால் தேர்வை சிறப்பாக எழுத முடிந்தது. இந்தப் பகுதியை வெளியிட்டு வரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு எங்களது நன்றி’’ என்று தெரிவித்தனர்.
‘வெற்றி மேடை உனதே’ பகுதி வாரந்தோறும் சனி, ஞாயிறு இரு நாட்கள் வெளியாகி வருகிறது.
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 13: குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு..