அமேசான் நிறுவனத்தில் ரூ.1 கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெற்ற மாணவருடன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், இணைவேந்தர் பி.சத்திய நாராயணன் உள்ளிட்டோர். 
கல்வி

எஸ்ஆர்எம் பல்கலை. மாணவருக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை: அமேசான் நிறுவனம் தேர்வு செய்தது

செய்திப்பிரிவு

சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொறியியல் இறுதி ஆண்டு மாணவரை ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் வளாக நேர்காணல் மூலம் அமேசான் ஜெர்மனி நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 2021 ஜூலை முதல் கடந்த ஏப்ரல் வரை டிசிஎஸ், சிடிஎஸ், கூகுள், அமேசான் விப்ரோ, இன்போசிஸ், எல் அண்ட்டி, டொயோட்டா, வால் மார்ட் உள்ளிட்ட 1,097 முன்னணி நிறுவனங்கள் வளாக நேர்காணல் (கேம்பஸ்இன்டர்வியூ) நடத்தின. இதன்மூலம் இறுதி ஆண்டு மாணவர்கள் 10,089 பேர் பல்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக பி.டெக். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு மாணவர் புரஞ்சாய் மோகனை, ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியத்தில் அமேசான் ஜெர்மனி நிறுவனம் வேலைக்கு தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் புரஞ்சாய் மோகனை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அவருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், இணைவேந்தர் பி.சத்தியநாராயணன், துணைவேந்தர் சி.முத்தமிழ்செல்வன், பதிவாளர் எஸ்.பொன்னுசாமி. வேலைவாய்ப்பு வழிகாட்டி இயக்குநர் வெங்கட சாஸ்திரி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

பாரிவேந்தர் பேசும்போது, ‘‘எம்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வளாக நேர்காணல் மூலம் வேலைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேர் வேலைக்கு தேர்வு பெற்றனர். இந்த ஆண்டு வளாக நேர்காணலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் எங்கள் மாணவர் மோகனுக்கு அமேசான் நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர் மோகன் 10 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார்’’ என்றார்.

மாணவர் மோகன் பேசும்போது, ‘‘ஒரு மாணவரின் முன்னேற்றத்துக்கு நல்ல வழிகாட்டல் மிகவும் முக்கியம். எங்கள் பல்கலைக்கழகத்தில் எனக்கு அந்த வழிகாட்டல் கிடைத்தது. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

பல்கலைக்கழக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் துறைதலைவர் கே.ஏ.சுனிதா, வளாகநேர்காணலுக்கு தயார்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் புதிய முயற்சிகளையும், பயிற்சிகளையும் விளக்கினார்.

SCROLL FOR NEXT